நம்முடைய தமிழ் அகராதியில் ஏறிட்டுக் கொள்ளுதல் என்றொரு சொற்றொடர் உண்டு. வந்தேறி என்றும் சொல்லுவர்கள். தனக்கல்லாதது போலிருக்கும் ஒரு பொறுப்பையோ தன்மையையோ அடைதல் என்பதாம். வடமொழியில் அந்யாபதேஶம் என்பர்.

ஆண்டாள் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் த்விஜ குலத்தில் பிறந்து வைத்தேயும், கோபிகையர் தன்மை அடைந்தாள் என்று பார்க்கிறோம். ஆழ்வார்கள் புருஷர்களாய்ப் பிறந்தும் பெண் நிலைமை எய்தி, நாயகியாகவும், தோழியாகவும், தாயாகவும் பாடக் கேட்கிறோம். மேலும் தம்மை யசோதையாகவும், தேவகியாகவும், தசரதனாகவும், மேலும் பல வ்யக்திகளாகவும் நினைத்துப் பாடுவதைப் பார்க்கிறோம். இதற்கு எல்லை நிலமாம்படி தம்மை எம்பெருமானாகவே பாவித்து தரித்திருந்தார்கள் கோபியரும், ஆழ்வார்களும் என்றும் காண்கிறோம்.

இருப்பினும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “மணிமிகு மார்பிலே குருமாமணியாய் அணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறி அன்று” என்கிறார். அதாவது பெண் பேச்சு ஆழ்வாருக்கு வந்து ஏறின தன்மையன்று. இது எம்பெருமானிடத்தில் ஆத்மாவுக்கு இயற்கையான தன்மையின் வெளிப்பாடே அன்றி, இடையில் வந்ததன்று என்பதாம்.

அது நிற்க.

இப்படி தன்னதல்லாத, மற்றையோர்க்காமதான நிலைகளை எம்பெருமானும் ஏறிட்டுக் கொள்கிறான் என்று காட்டுகிறார் பிள்ளை லோகாசார்யர்.

மஹாபாரதத்தில் தூது போனவன் ஏற்றம் சொல்லும் ஆசிரியர் அதில் உபாய வைபவம் காட்டப்படுகிறது என்றவிடத்து “ஆசார்ய க்ருத்யத்தையும், புருஷகார க்ருத்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளுகையாலே” என்கிறார்.

அறியாதனவற்றை அறிவிக்கும் செயலானது ஆசார்ய க்ருத்யமாகும். போர்க்களத்தில் அர்ஜுனன் “ஶிஷ்யஸ் தேSஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம்” என்று தன்னை சிஷ்யனாக்கி உபதேசிக்கும்படி கேட்டான். ஒரு ஆசார்யன் தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டியிருக்க, அத்தன்மையை தானே எடுத்துக் கொண்டு அவனுக்கு தத்வ விவேகம் முதல் ப்ரபத்தி வரையிலான அவனறியாத அர்த்த விசேஷங்களையெல்லாம் வெளியிட்டருளினான் கீதாசார்யன் என்பதால் ஆசார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டான்.

புருஷகாரம் என்பது பிராட்டியின் ஏகதேச தன்மையாம். பாஞ்சராத்ரத்தில் பகவானும் “லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி:” என்றான். ஷரண்யன் என்பதே இவனுடைய தன்மையாகும். அர்ஜுனனை தானே அங்கீகரித்து விடலாமே எனில் அவ்வங்கீகாரத்துக்கும் புருஷகாரம் தேவை என்று காட்டுகிறார் மணவாள மாமுநிகள்.

எம்பெருமானை சரணமாக பற்றுமிடத்தில் அதைச் செய்யும் அதிகாரி தேவைப்படுவது போலே, புருஷகாரத்வமும் தேவை என்பதை உபாயவரணத்தைக் காட்டும் த்வயத்தின் பூர்வ வாக்யத்தில் காணலாம். இவை இரண்டும் பலிப்பது ப்ரபத்யே என்கிற சப்தத்தாலும், ஸ்ரீமத் என்கிற சப்தத்தாலும். பிராட்டியின் புருஷகார பலத்தாலே சாயும் தன் சீற்றத்தை அவன் அர்த்திக்காத போதும் இங்கு தானே தணித்துக் கொண்டு அவனை ஏற்றுக் கொண்டதால், புருஷகார க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டான்.

ஆக தன்னுடையவையல்லாத இவ்விரண்டு நிலைகளையும் அர்ஜுனன் அர்த்திக்கவும், அர்த்திக்காத போதும், எம்பெருமான் ஏன்று கொண்டான் என்று காண்கிறோம்.

இது மட்டுமன்று.

ஒருவர் தம்முடைய தன்மை என்றிருக்கும் ஒன்றைக் கூட ஏறிட்டுக் கொள்ள இயலுமோ, அப்படியும் ஒன்றுண்டோ என்றால், அதுவும் உள்ளது என்றே தெரிகிறது.

திருமழிசை ஆழ்வார் தம்முடைய நான்முகன் திருவந்தாதியை முடிக்கும் வகை காணீர்.

பாசுரம் 95’ல் துவங்கும் வார்த்தைகள் “ஏன்றேன் அடிமை” என்பதாம். இதில் ஆழ்வார் அடிமைத் தன்மையை ஏற்றுக் கொண்டேன் என்கிறார். ஏன்றேன் என்பது ஏறிட்டுக் கொள்ளுதலாகும்.

இங்கு நமக்கொரு ஐயம் ஏற்படக்கூடும். ஆத்மாவுக்கு அடிமைத் தன்மை ஸ்வரூபமன்றோ.

ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வம் நிரூபகமா, சேஷத்வம் நிரூபகமா என்பதைத் தெளிவித்துக் கொள்ள உடையவர் கூரத்தாழ்வானை திருக்கோட்டியூர் நம்பி பக்கல் அனுப்ப, நம்பியும் “ஆழ்வான்! ஆழ்வார் அடியேன் உள்ளான் என்றபடி கண்டாயே” என்றாராம். அதனால் ஆத்மாவுக்கு சேஷத்வமே அடையாளம் என்பது தெளிவு.

அப்படி இருக்க அத்தன்மையை எப்படி ஏறிட்டுக் கொண்டேன் என்கிறார் ஆழ்வார் என்பது கேள்வி.

பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம் கேண்மின்: “அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன்.”

நோயுற்றவனுக்கு மருந்து தேவை என்றாலும் அதில் ருசியின்மை காரணமாக முகம் சுளிப்பதுண்டு. அது போல அடிமைத் தன்மை இயற்கை என்றாலும் இவ்வுலக நோயில் சிக்கி உழலும் மனிதனுக்கு அது அளவுபட்டிருக்கும். பிறப்பிடும்பை இழிந்த பின்னர் அடிமையில் பொருந்தி நின்றேன் என்றார் ஆழ்வார்.

ஜன்ம பரம்பரைகளில் தோள்மாறிப் பலபிறப்பும் பிறந்து அவ்வடிமைத் தன்மையை இழந்தோம் என்ற இழவுமின்றி இருக்கும் ஸம்ஸாரி சேதனனுக்கு அதை மீண்டும் உணர்வதென்பது ஏறிட்டுக் கொள்வது போன்றதேயாம் எனவும் கொள்ளலாம்.

இந்நிலை சேதனனுக்கு மட்டும் தானா என்னில், அது இல்லை, எம்பெருமானுக்கும் அது உண்டு என்கின்றனர் நம் பூர்வர்கள்.

அனைத்து கல்யாண குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய் இருப்பவன் அவன். சரணாகதி கத்யத்தில் எம்பெருமானார் “கல்யாண குணைகதாந” என்றார்.

அப்படிப்பட்டவனுக்குத் தன்னுடையதான ஒரு குணத்தையோ நிலையையோ ஏறிட்டுக் கொள்ளும்படியானது ஏற்படுமோ எனில்.

ஸித்தோபாயமாக, அதாவது உபாய உபேயமாம் இவ்விரு தன்மையுடன் விளங்குமவன் எம்பெருமான். ஆனால் அவன் உபாய வைபவத்தைச் சொன்ன அதே ஸ்ரீவசனபூஷண ஸூத்ரத்தில் “உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே” என்றார் பிள்ளை உலகாசிரியன்.

அவனே உபாயமாய் இருக்க, அதை ஏறிட்டுக் கொண்டான் என்பது எவ்வகையில் எனில்.

அர்ஜுனன் தன்னை பெரிய வீரனாகவும், ஸ்ரீ க்ருஷ்ணனை தம்மில் ஒருவனாகவும் ப்ரமித்து கிடந்தான். அப்படி நினைத்துப் போர்க்களம் புகுந்த அவன், அங்கே தன்னைச் சிஷ்யனாக்கிக் கொண்டு தனக்கு உபதேசம் செய்யும்படி அவனிடமே விண்ணப்பித்தான். ஆனால் கீதாசார்யனை “த்வமேவோபாய பூதோ மே பவ” என்று தனக்கு உபாயமாகும்படி அவன் அர்த்திக்கவில்லை.

இருப்பினும் அவன் மீது கருணை கொண்ட பகவான் அவன் கேளாதிருக்கச் செய்தேயும் அந்த உபாயத் தன்மையை அவ்விடத்தில் தானே ஏறிட்டுக் கொண்டு அவனுக்குச் சரம ஶ்லோகத்தை உபதேசித்தான்.

மணவாள மாமுநிகள் “நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளைப் பண்ணக் கடவோம் என்று தானே ஏன்று கொண்டு” என்றாரிறே.

ஆசார்யன் அஜ்ஞாத ஜ்ஞாபநம் செய்ய, பிராட்டி புருஷீகரிக்க, சேதனன் அவனை உபாயமாக அர்த்தித்து பெற வேண்டியிருக்க, அர்ஜுனன் விஷயத்தில் அம்மூன்றையும் தானே வரித்து ஏறிட்டுக் கொண்டான் என்னும் ஏற்றம் அவன் ஒருவனுக்கே அசாதாரணமாய் அமைவதாலேயே மஹாபாரதத்தில் உபாய வைபவம் சொல்லிற்றாய்த்து என்றார் பிள்ளை உலாகரியன்.

குற்றம் குறைகளை பொறுத்தருள வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் மதுரகவி தாசன்

TCA Venkatesan

ஏறிட்டுக் கொண்டமை
Tagged on:     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *