ஒரு ஆசார்யன் தன்னுடைய சிஷ்யனுக்கு எம்பெருமான் மற்றும் பிராட்டியினுடைய பெருமைகளையும், சேதனனுடைய சிறுமையையும் பரக்க உபதேசித்து வந்தார்.

சிஷ்யனுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது.

சேதனனுக்கு ஒரு தனிப் பெருமை சொல்ல வேண்டும். ஆனால் அதோடு நிற்காமல் அவ்வேளையிலேயே எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஒரு குறையும் சொல்ல வேண்டும் என்று ஆசார்யனிடத்தில் விண்ணப்பித்தான்.

இப்படிக் கேட்கும் சிஷ்யனுக்கு இளைத்தவராய் இருப்பரா ஆசார்யர்?

அவர் கூறியது என்னென்னில்.

1. எம்பெருமானுக்குச் சிறுமையாவது

அவன் ஒருவர்க்கும் சேஷப்பட்டவன் அல்லன் என்பதே.

அவனுடைய குணமாவது அவன் ஸர்வ ஸ்வதந்த்ரன் என்பது. அவன் செயல்களைப் பற்றி அவனைக் கேட்பார் யாருமில்லை.

பட்டத்து யானை என்றாரிறே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

தாமரையாள் சிதகுரைக்கிலும் என் அடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தார் என்றிறே அவன் வார்த்தை.

இதற்கடி அவன் யார்க்கும் சேஷப்பட்டவன் இல்லை என்பதே.

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயன் அன்றோ.

அவனான ஒருவனுக்குப் பணி செய்வதால் வரும் சுகத்தை அறியாதவன் அவன்.

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி என்று அவன் கூறப்பட்டாலும், அதுவும் அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலே வருமத்தனையே ஒழிய வேறில்லை.

அவனே விஷ்ணு என்பதால் அவனுக்கு வைஷ்ணவத்வம் இல்லை என்பது அவனுக்குண்டான குறை.

2. பிராட்டிக்குச் சிறுமையாவது

அவள் எம்பெருமானுக்கு சேஷப்பட்டவள் தான். அதனால் வரும் இன்பத்தை உணர்ந்தவளே.

அதனால் சேஷபூதையன்று என்ற குறையை அவளுக்குக் கூற முடியாது.

ஆனால் அவள் சேஷப்பட்டது அவன் ஒருவனிடத்தில் மட்டுமே.

என்றால், அது எப்படி குறையாகும்?

அநந்யார்ஹ சேஷத்வம் நிறை அன்றோ?

உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் என்றிறே அவள் நிலை.

புறந்தொழாமையன்றோ அவளுக்குண்டான தன்னேற்றம்.

அது உண்மையே.

ஆனாலும் எம்பெருமான் பிராட்டி இருவருமான மிதுனத்துக்கு அவள் சேஷப்படவில்லை. அவன் ஒருவனிடத்தில் மட்டும் தானே அவள் சேஷத்வம் செல்கிறது.

எனவே அவளுக்கு வைஷ்ணவத்வம் உண்டு என்றாலும், அவளே ஸ்ரீ என்பதால் அவளுக்கு ஸ்ரீவைஷ்ணவத்வம் இல்லை என்பது அவளுக்குண்டான குறை.

3. சேதனனுக்குப் பெருமையாவது

சேஷத்வமே சேதனனுக்கு உண்டான ஸ்வரூபம்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் என்றார் ஆழ்வார் என்றாறிறே நம்பி.

சேதனனின் அடிமையில் குடிமை கொண்ட வாழ்வு நெறியை வணக்குடைத் தவநெறி என்றார் ஆழ்வார்.

எம்பெருமானுக்கு எல்லா விதமான அந்தரங்க கைங்கர்யங்களையும் செய்து ஆதிசேஷன் என்று பெயர் பெற்றான் அரவு.

இப்படி சேதனனுக்கு உண்டான சேஷத்வத்துக்கு பிராட்டியின் சேஷத்வத்தைக் காட்டிலும் ஏற்றம் உண்டோ? அவள் அடிமைக்கு ஒரு குறை முன்பு சொல்லப்பட்டதே எனில்.

இவன் கைங்கர்யத்துக்கு அக்குறை இல்லை.

இவன் செய்யும் அடிமை அவ்விருவருமான சேர்த்தியிலே என்றார் பிள்ளை லோகாசாரியர்.

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்றார் இளைய பெருமாள். அவ்வடிமையை இருவருக்குமாகச் செய்தார்.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||

என்று, வைதேஹியுடன் இருக்கும் இராமனுக்கு நாம் எல்லாம் செய்வேன் என்பதன்றோ அவர் வார்த்தை.

உபாய வேளையோடு போக வேளையோடு வாசியற ஒரு மிதுனமே உத்தேச்யம் என்றார் நம்பிள்ளை.

இதுவன்றோ வழுவிலா அடிமை.

இப்படி இருவருக்கும் செய்யும் இவ்வடிமையானது இவனுக்கு மட்டுமே உண்டு என்பதால், இவனுக்குண்டான ஸ்ரீவைஷ்ணவத்வம் வேறொருவர்க்கும் இல்லாத தனிப் பெருமை என்று முடித்தார் ஆசார்ய ஸார்வபௌமர்.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணும்.

அடியேன் மதுரகவி தாசன்
TCA Venkatesan

குறையும் நிறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *