சிறை இருந்தவள் ஏற்றம் அறிவோம். நடந்தவன் ஏற்றமும் அறிவோம். இது என்ன நடந்தவள் ஏற்றம்?
கொடியவள் தன் சொற்கொண்ட தயரதன் பெருமாளை காட்டுக்குச் செல்ல நியமிக்க, தான் மட்டும் செல்ல வேணும் என நினைத்தவனை பிராட்டி மறுதலிக்க, காட்டில் உள்ள கடினங்களை எம்பெருமான் அவளுக்கு எடுத்துரைத்தான்.
மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது, காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது. அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது, பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும் தலைமிதியுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.
ஆனால் பிராட்டி அப்படிச் செய்தாளா என்றால் இல்லை என்று சொல்லும்படியாய்த் தோன்றுகிறது.
காட்டிற்கு எம்பெருமானும், இளைய பெருமாளும், பிராட்டியும் போகும் போது, அகார வாச்யனான பெருமாள் முன்னே நடக்க, உகார வாச்யையான பிராட்டி இடையிலும், மகார வாச்யனான இலக்குமணன் பின்னேயும் சென்றதாகக் காண்கிறோம்.
ப்ரணவமே இவர்களாக உருக்கொண்டு அங்கே நடந்தது என்று ஆசார்யர்கள் பணிப்பர்.
ஆகில் – தாயார் சொன்னது பொய்யா? ஸத்யம் தவறாமை அவனுக்கு மட்டும் உரித்தன்றே?
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே என்றிறே அவள் வார்த்தை.
பின் தான் சொன்னபடி பிராட்டி நடந்து கொள்ளவில்லையே என்றால்.
கேண்மின்.
தாயார் சொன்னதை நாம் மேலெழப் பார்த்தல் தகுதியன்று. அவள் வார்த்தையின் உள்ளர்த்தம் என்னவென்று பார்க்க வேண்டும்.
காட்டிலே தான் முன்னே நடப்பேன் என்று அவள் கூறியது, சாதாரண நடையைப் பற்றியன்று. அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.
அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
எப்படியென்னில்.
சீதையின் சரிதமான இராமாயணத்தில் அவள் நோக்கம் இலங்கைக்குச் சென்று அங்கு சிறைப்பட்டிருக்கும் தேவ மாதரை காப்பதும், இராவணனுக்கும் உபதேசம் செய்து அவனை இராமனிடம் கொண்டு சேர்ப்பதும் ஆகும்.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும் முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு – தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.
இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று இத்ருணத்தோபாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி, அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும் தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.
இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன, அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை. அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில் அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும், முன்னின்று பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும் மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.
இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.
குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணும்.
அடியேன் மதுரகவி தாசன்
TCA Venkatesan