நல்ல கொலையா? அப்படி என்றால் என்ன?

நமக்கு கொலை என்பது தெரியும். அதாவது ஒருவனை இன்னொருவன் வதம் செய்வது. ஶாஸ்த்ரத்துக்கு ஒவ்வாத தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தற்கொலையையும் நாம் அறிவோம்.

இது என்ன, புதிதாக நற்கொலை?

கொலையில் நல்ல கொலை, தீய கொலை என்றும் உண்டோ?

ஒருவன் செய்த படுபாதகச் செய்லுக்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அதைக் கூட நற்கொலை என்பார் பொதுவிலில்லை.

இன்னும் சொல்லப் போனால், அரசாங்கம் விதிக்கும் அந்த தண்டனையும் தவறு. எத்தனை பெரிய கொடுமையைச் செய்திருந்தாலும், உயிர் வதை கூடாது என்று வாதாடுமவர்கள் இன்றளவும் உண்டு என்றே காண்கிறோம்.

எனில், நற்கொலை என்பது என்ன, அதை யார் சொன்னார்கள், அதை யார் செய்யக் கூடும் என்பது கேள்வி.

இதை சீதா பிராட்டி ராவணனுக்குச் சொன்னாள் என்றும், அதைச் செய்பவன் எம்பிரானான இராமன் என்றும் உரைக்கின்றனர் நம் பூர்வர்கள்.

அது எங்ஙனென்று பார்ப்போம்.

நற்கொலை என்றே சொல்லாவிட்டாலும் படுகொலையைத் தவிர்க்க வேண்டில் என்று ராவணனுக்கு உபதேசிக்கிறாள் பிராட்டி.

அவள் வார்த்தை கேண்மின்.

மித்ரம் ஔபயிகம் கர்த்தும் ராம: ஸ்தாநம் பரீப்ஸதா ||

வதம் சாநிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப: |

அவள் கூற்றாவது, நீ ஓர் இடத்தில் இருக்க வேண்டும் என்ற இச்சையும், கோரமான வதத்திலிருந்து தப்ப வேண்டும் என்ற இச்சையும் கொண்டவனாகில், பெருமாளுடன் நட்பு கொள்ள வேணும் என்பது.

இதையே அவள் மறுபடியும் வலியுறுத்துகிறாள்.

விதித: ஸ ஹி தர்மஜ்ஞ்ய: ஷரணாகதவத்ஸல: ||

தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி |

அதாவது, நீ ஜீவித்திருக்க ஆசை உடையவனாகில் உனக்கும் ராம பிரானுக்குமிடையில் நட்பு உண்டாக வேணும் என்றும் கூறுகிறாள்.

பாபமே வடிவெடுத்தவனான ராவணனை பார்த்து எம்பெருமானுடன் ஸ்நேஹம் கொள்வாய் என்று பிராட்டி உபதேசிக்கக் காரணம் என்ன?

இது அவள் செய்யும் புருஷகாரத்தின் ஒரு அங்கம் என்கிறார் பிள்ளை லோகாசார்யர்.

ஸ்ரீவசனபூஷணத்தில் அவர் காட்டும் விஷயம்: “இருவரையும் (அதாவது ஈஶ்வரனையும் சேதனனையும்) திருத்துவது உபதேசத்தாலே.”

சேதனனைத் திருத்துவது என்பது அவனிடம் அவள் கூறும் உபதேசமாகும்.

“உன் அபராதத்தைப் பார்த்தால் அவனிடம் செல்ல உனக்கு அருகதையில்லை. அவனோ நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யம் உடையவன். எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றிருப்பவன், தானிட்ட ஶாஸ்த்ரத்தினால் உன்னைத் தண்டியாதொழியான். அவன் திருவடிகளில் தஞ்சம் புகுந்தால் குண பரிபூர்ணானவன் அபராத பரிபூர்ணனான உன்னை அங்கீகரிப்பானோ தண்டிப்பானோ? என்றெல்லாம் நீ நினைக்கக் கூடும்.

ஆனால் நீ அஞ்ச வேண்டாம். நீ அவனைப் பார்த்து முகத்தைத் திருப்பினவளவிலே எல்லா குற்றங்களையும் பொறுப்பது மட்டுமன்றி அவற்றை போக்யமாகவே அவன் கொள்ளுவான். அதுவே அவன் குண பூர்த்தி.”

இப்படி அவள் சேதனனிடத்தில் செய்யும் உபதேசத்தை ராவணனிடமும் செய்தாள். அப்பொழுது, புருஷர்களில் உத்தமனான ராமனிடத்தில் நீ நட்பு கொள்ள வேண்டும் என்றும் அதற்கான இரண்டு காரணங்களையும் அவனுக்குச் சொன்னாள்.

ஒன்று – ஓரிடத்தில் நிலைக்க வேணும் என்ற உன் எண்ணம்.

உனக்கு ஓர் இருப்பிடம் வேன்டுமாகில் அதற்கும் அவரையே பற்ற வேண்டும் என்பது அவள் வார்த்தை. கொள்ளை அடித்துத் திரிபவர்க்கும் ஓரிடம் என்றுண்டு என்று உதாஹரிக்கிறார் மணவாள மாமுநிகள். அப்படித் தவறே செய்து போவேன் என்றிருந்தாலும், அதற்கும் உனக்கு ஒரு இடம் தேவை. அதற்காகவாவது நீ அவரை பற்றியேயாக வேண்டும்.

ஏனெனில். அவரதில்லை என்று ஒரு இடமும் இல்லை. கரந்தெங்கும் பரந்துளன் என்றார் ஆழ்வார். அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித: என்றது வேதம். உபய விபூதியும் அவர் சொத்தன்றோ.

விபவாவதாரத்தை மட்டும் இட்டுப் பார்த்தாலும் இஷ்வாகு குலத்தில் வந்தவராகையால் உலகனைத்தும் அவருடையதே. இந்த லங்கையிலேயே இருந்து போருவேன் என்றாலும் அதுவும் அவர் அநுமதியின்றி நடவாது.

இரண்டாவது – எதிரி காலில் விழுந்து வாழ்ந்திருக்க மாட்டேன். விழுந்தாலும் தலை குப்புற விழ மாட்டேன், மல்லாந்து விழுவேன் என்றிதற்கு இணங்க மறுத்தாயாகில், உன்னை அவர் கொல்லுவது உறுதி.

ஆனால் அந்தக் கொலை சித்ரவதமாக ஆகாமல் நற்கொலையாக ஆவதற்கும் அவரையே பற்ற வேணும். ஏதோ ஒரு கொலையாகட்டும், வதமாத்ரம் அநுமதம் என்றிருந்தாய் போலும். அதுவன்று, கோரம் வதம் என்றே அமையும் என்றாள் பிராட்டி.

நீ ஜீவிக்க வேணும், இல்லை நற்கொலையாவது ஆகட்டும் என்றிருந்தாயாகில், இரண்டுக்கும் அவரையே பற்ற வேணும், உனக்கும் அவருக்கும் உறவு உண்டாக வேணும் என்று அவனை அச்சுறுத்தினாள் பிராட்டி. அது பலிக்காதது அவள் உபதேசக் குறையன்று, அவனுடைய பாப கூட்டத்தின் செயலே என்றார்கள் நம் ஆசார்யர்கள்.

மித்ரம் கர்த்தும் என்றாள் பிராட்டி. அவனோ மித்ர பாவேந என்றான். இரண்டுக்கும் அர்த்தம் ஆபிமுக்யம் என்பதே.

இப்படி சித்ரவதம் என்றொன்று அமையுமோ என்னில்.

சிறிய திருமடலில், திருமங்கையாழ்வார் கூறும் வார்த்தை: “அவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்”

சீதா பிராட்டிக்குத் தான் நேராவன் என்று வந்த கொல்லையரக்கியை இளவலால் மூக்கும் பருச்செவியும் அரிந்திட, அவளுக்கு மூத்தவர்களான கர தூஷணர்கள் எம்பெருமானை எதிர்த்து வர, அவர்களைக் கொல்லும் பொருட்டு தனி ஒருவனாக வில் வளைத்து நின்ற ராமனின் அழகைக் அநுபவிக்கிறார் ஆழ்வார். அஸஹாய ஸூர என்றாரிறே வேதாந்த தேசிகனும்.

அப்படி வந்தவர்களை, இனிப்போய் நரகம் என்று ஒன்று உண்டு, அங்கு துன்பத்தை அநுபவிப்போம் என்றிராமல், அந்தப் போர்க்களத்திலேயே அவர்கள் அதைக் காட்டிலும் கொடிய வேதனையை அடையும்படி அடித்தார் பெருமாள்.

இதிலும் ஒரு சீரிய அர்த்தம் காண்பித்தார்கள் நம் பூர்வர்கள். அவர்கள் அடைந்த வேதனையானது அவர் அடித்த பாணங்களினாலன்று. அவர் சிலை குனித்த அழகு அவர்களைப் படுத்தின பாட்டைக் காட்டிலும் வெந்நரகம் என்று ஒன்றில்லை என்றிருந்தார்கள் என்பதாம். இதுவும் அவன் அழகு படுத்தும் பாடு.

உன்னவர்களான அவர்கள் பட்ட பாட்டை அடையாமல், கொலையாவேன் என்றாலும் அது நற்கொலையாகும் வழியைத் தேடிக் கொள்வாய் என்பதே பிராட்டியின் வார்த்தை.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் மதுரகவி தாசன்

TCA Venkatesan

நற்கொலை
Tagged on:     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *