ஆசார்ய ஹ்ருதயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அதியத்புதமான ஸூத்ரம் கேளீர்: “பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர்”.

அதாவது ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவரான இராமநுஜர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைத் துணை கொண்டே ப்ரஹ்ம ஸூத்ர வாக்யார்த்தங்களை அறுதியிடுவர் என்பதாம்.

இங்கு திருவாய்மொழி என்றும் ப்ரஹ்ம ஸூத்ரம் என்றும் நிர்ணயித்திருந்தாலும், திருவாய்மொழி என்றவிடம் எல்லா ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகள் என்றும், ப்ரஹ்ம ஸூத்ரம் என்றவிடம் ப்ரஸ்தாந த்ரயம் என்றும் கொள்ளலாம்.

“விதயஶ்ச வைதிகாஸ்த்வதீய கம்பீர மநோநுஸாரிண:” என்றார் ஆளவந்தார்.

“பேசிற்றே பேசும் ஏககண்டர்” என்றார் நாயனாரும்.

இப்படி ஆழ்வார்கள் சொன்னதைக் கொண்டே உடையவர் அர்த்தம் சாதித்தார் என்பதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்.

பகவத் கீதையில் பத்தாவது அத்யாயம் ஒன்பதாம் ஶ்லோகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்லும் வார்த்தை:

மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்

கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச

இதில் அடியார்கள் எவ்விதம் தம் பொழுதைப் போக்குவர்கள் என்பதைக் காட்டுகிறான் கீதாசார்யன்.

அவனிடத்திலேயே தங்கள் மனத்தைச் செலுத்தியவர்கள் அவன் குண சேஶ்டிதங்களை ஒருவருக்கொருவர் சொல்லுவதும் கேட்பதுமாய் இருந்து இன்புறுகிறார்கள் என்கிறவிடத்து, “துஷ்யந்தி ச ரமந்தி ச” என்று முடிக்கிறான்.

இவ்விரண்டு கார்யங்களும் ஒரே அர்த்தத்தைச் சொல்வன – அதாவது அடியவர்கள் இன்பம் எய்துகிறார்கள் என்பதே.

இதில் புநருக்தி தோஷம் – அதாவது சொன்னதையே திருப்பிச் சொல்லும் குற்றம் – வாராதா என்பது கேள்வி.

இங்கு மற்ற பாஷ்யகாரர்கள் எவ்வாறு வ்யாக்யானிக்கிறார்கள், எம்பெருமானார் வ்யாக்யானிக்கும்படி என்ன என்பதை நோக்க வேண்டும்.

சங்கராசர்யர் தம்முடைய பாஷ்யத்தில் “துஷ்யந்தி – பரிதோஷமுபயாந்தி” என்றும்

“ரமந்தி ச – ரதிம் ச ப்ராப்னுவந்தி” என்றும் சொல்கிறார். ஆனால் இவ்விடத்து பரிதோஷம் என்றால் என்ன, ரதிம் என்றால் என்ன, அவ்விரண்டுக்கும் என்ன வித்யாசம் என்று அவர் காட்டவில்லை.

மத்வாசார்யர் ஒன்பதாவது ஶ்லோகத்துக்கு தனியாக வ்யாக்யானம் செய்யவில்லை. எட்டாவது ஶ்லோகத்திலேயே ஒன்பது, பத்து, பதினோராம் ஶ்லோகங்களின் திரண்ட அர்த்தங்களை அவர் காட்டி விட்டார்.

நம் பாஷ்யகாரர் இவ்விடத்தில் என்ன வ்யாக்யானிக்கிறார் என்றால் –

“வக்தார: தத்வசநேந அநந்யப்ரயோஜநேந துஷ்யந்தி; ஶ்ரோதாரஶ்ச தச்ச்ரவணேந அநவதிகாதிஶயப்ரியேண ரமந்தே”

என்பதாம்.

வேதாந்த தேசிகனும் “லோகே கதாப்ரயோகோ ஹ்ருஷ்ட:” என்றும், “துஷ்யந்தி – கதக விஷயம்”, “ரமந்தி – ஶ்ரவணமூலத்வம் லப்தம்” என்றும் தம்முடைய தாத்பர்ய சந்த்ரிகையில் பாஷ்யகாரரை அடியொற்றிக் காட்டுகிறார்.

அதாவது, ஒரு சிலர் எம்பெருமானுடைய உயர்வறும் உயர் நலங்களைச் சொல்லி மகிழ்கிறார்கள் என்றும், ஒரு சிலர் அவ்விஷயங்களைக் கேட்டு மகிழ்கிறார்கள் என்றுமாம்.

அடியார் அடையும் ஆநந்தத்தை இப்படி இருவகையாகப் பிரிக்கிறார் உடையவர்.

இதற்கடி, இந்தச் ஶ்லோகத்திலேயே சொல்லப்படும் “போதயந்த: பரஸ்பரம்” என்னும் எம்பெருமான் வார்த்தையாகும். அடியவர்கள் சொல்பவர்களாயும் கேட்பவர்களாயும் இருப்பர்கள் என்பது தெளிவு.

இவ்வர்த்தத்தை ஸ்வாமி ஒருங்க விடுவதற்கான மூலத்தை நாம் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் அந்தாதியில் காணலாம்.

பாசுரம் 63’ல் ஆழ்வார்

தரித்திருந்தேனாகவே தாரா கணப்போர்

விரித்துரைத்த வெந்நாகத்துன்னை – தெரித்தெழுதி

வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்

பூசித்தும் போக்கினேன் போது

என்கிறார்.

இங்கு தெரித்து என்பதற்கு அர்த்தம் தெரிவிக்கை; கேட்டும் என்பதற்கு அர்த்தம் ஒருவர் தெரிவிக்க அதை ஒருவர் கேட்கை.

பெரியவாச்சான் பிள்ளை தெரித்து என்பதை அறிந்து எனக் கொண்டு அநுஸந்தித்து என்று வ்யாக்யானம் அருளி இருக்கிறார். இருப்பினும் இவ்விடத்தில் அதைத் “தெரிவித்து”, அதாவது உபதேசித்து எனவும் கொள்ளலாம் என்று பெரியோர் பணிப்பர்.

ஆழ்வார் இவ்விரண்டு விஷயங்களையும் தம்மொருவரிடத்திலேயே வைத்திருக்கிறார்.

கேட்கும் சிஷ்யனே சொல்லும் ஆசார்யனாய் இருப்பதை நாம் காண்கிறோம்.

சொல்வதும் கேட்பதும் ஒருவரிடத்திலேயே வரும் என்பதும் பகவத் அநுபவத்திற்குச் சேரவே உள்ளதாம்.

இவை இரண்டும் வெவ்வேறு காலங்களிலும் ஒரே வ்யக்தியில் அமையக் கூடும். தேசிகன் “காலபேதேந ஸம்பவாந்” என்கிறார்.

“தானே சொல்லி தானே கேட்கும் இத்தனையிறே” என்று ஆண்டாளைச் சொன்னாரிறே எம்பெருமானாரும்.

இவ்வரிசையைக் கொண்டு பார்க்கும் போது எம்பெருமான் துஷ்யந்தி என்றது அவன் குண சேஷ்டிதங்களைப் பேசுவதில் வரும் ஆநந்தம் என்றும், ரமந்தி என்றது அதைக் கேட்பதில் வரும் ஆநந்தம் என்றும் சொல்லக் குறையில்லை.

இப்படி ஆழ்வார் சொன்னதைத் தான் எம்பெருமானும் சொல்லியிருப்பானா என்றால் கீழே சொன்ன ஆளவந்தாரின் வார்த்தையை ஸ்மரிப்பது.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் மதுரகவி தாசன்
TCA Venkatesan

ஒருங்க விடுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *