நம்முடைய ஆழ்வார்கள் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களில் பலவிடங்களில் கணிதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். திருச்சந்தவிருத்தம் துவக்கத்திலேயே திருமழிசை ஆழ்வார் பல எண்கணக்குகளைக் காட்டுகிறார்.

உதாரணமாக இரண்டாம் பாசுரம்:

ஆறுமாறுமாறுமாய் ஓரைந்துமைந்துமைந்துமாய்

ஏறுசீரிரண்டு மூன்றும் ஏழுமாறுமெட்டுமாய்

வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்

ஊறொடோசையாய ஐந்தும் ஆயவாய மாயனே!

இப்படியே பலவுள.

இவ்விதமாக மட்டுமில்லாமல், கணக்கர்த்தம் ஜனிக்காவிட்டாலும் கணக்கு சப்தம் காட்டுமிடங்களும் உண்டு.

உதாரணமாக, திருமங்கை ஆழ்வார் தம்முடைய திருவெழுகூற்றிருக்கையில் “ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்” என்றவிடத்து, ஒரு, இரு என்ற சப்தங்கள் எண்கள் போலத் தோற்றினாலும், ஒப்பற்ற, பரந்த என்ற அர்த்தங்களில் இயற்றியுள்ளார்.

இது போலவும் பலவுள.

அர்த்தமுடைத்து வரும் எண்கள் எல்லாவற்றிலும் கணிதம் சரியாகவே அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

ஆனால் ஒரு ஆசார்யர் புதியதொரு கணக்கைக் காட்டுகிறார்.

இதென்ன புதுக் கணக்கு?

இதைக் கூறியவர் யார்? இதை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது?

சொன்னவர் பிள்ளை லோகாசார்யர் என்னும் ஆசார்யர்.

அதை நாம் புரிந்து கொள்ளத் தவிக்க வேண்டாதபடிக்குத் தெளிவாக விளக்கியிருக்கிறார் மணவாள மாமுநிகள்.

எப்படி என்று பார்ப்போம்.

1. இரண்டு குறைந்தால் இரண்டிற்கும் இரண்டு கூடியது.

-2 = 2 x 2

இரண்டிற்கு என்றது தாயாரையும் எம்பெருமானையும். அவர்கள் குணங்களைக் கொண்டே அவர்களை உருவகப்படுத்துகிறார் ஆசார்யர். அதாவது புருஷகாரம் என்பதாகவே நிற்பவள் பிராட்டியும், உபாயம் என்பதாகவே நிற்பவன் எம்பெருமானும் என்றபடி.

இரண்டு குறைந்தால் என்பது சேதனனுக்கானது. அவனுக்கு உள்ள இரண்டு விஷயங்கள் தோஷமும் குணஹாநியும்.

அதென்ன தோஷமும் குணஹாநியும்? இரண்டும் ஒன்று போலத் தோன்றுகிறதே என்று நாம் யோசிக்கக்கூடும்.

கேண்மின்.

தோஷம் என்பது செய்யக்கூடாததைச் செய்வது. “இதம்மாகார்ஷீ:” – இதைச் செய்யாதே என்று ஶாஸ்த்ரங்கள் மூலமாக எம்பெருமானே விதித்துள்ளான். இருந்தும் அதையே செய்வது தோஷம்.

குணஹாநி என்பது செய்ய வேண்டியவற்றைச் செய்யாதிருத்தல். “இதம்குரு” – இதைச் செய் என்று ஶாஸ்த்ரங்களில் அவனே வலியுறுத்தியுள்ளான். ஆனாலும் அதைச் செய்யாமல் விடுவது குணஹாநி.

இவை இரண்டும் தன்னுடைய ஆணைகள் என்பதைத் தானே சோதிவாய் திறந்து “ஶ்ருதிஸ் ஸ்ம்ருதி: மமைவாஜ்ஞா” என்று பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளான் எம்பெருமான்.

தோஷம், குணஹாநி இரண்டையும் நாம் விடுவதில்லை என்பதை, சரணாகதி கத்யத்தில் எம்பெருமானார் “அக்ருத்யகரண க்ருத்யாகரண’ என்று சொல்லி, அவற்றிற்காக “அசேஷத க்ஷமஸ்வ” என்று நம் சார்பில் அபராத க்ஷாமணம் கோருகிறார்.

இந்த தோஷமும் குணஹாநியும் கழிந்தே சேதனன் தம்மிடத்தில் வரவேண்டும் என்று புருஷகாரம் செய்பவளான பிராட்டியும், உபாயமாகவே திகழ்பவனான பெருமானும் இருப்பர்களாகில் – அதாவது, இருவருக்கும், இவ்விரண்டும் போய் தான் சேதனன் தம்மிடத்தில் வரவேண்டும் என்ற எண்ணம் இருப்பில் – அவர்கள் இருவருக்குமே அவ்விரண்டும் – அதாவது, தோஷமும் குணஹாநியும் கூடியதாகி விடும் என்கிறார் ஆசிரியர்.

எம்பெருமானுக்கும் பிராட்டிக்குமே தோஷமா? குணஹாநியா? என்னில்.

மாமுநிகளின் உந்நத வ்யாக்யானம் கேண்மின்.

தோஷம் எப்படி என்றால்.

ஸ்ரீவிஷ்ணு புராணம் எல்லா உலகங்களுக்கும் பிராட்டியைத் தாய் என்றும், பெருமானைத் தந்தை என்றும் கூறுகிறது – “த்வம்மாதா ஸர்வலோகாநாம் தேவதேவோஹரி: பிதா”.

இதையே எம்பெருமானாரும் “அகிலஜகந்மாதரம்” என்றும் “பிதாஸிலோகஸ்ய சராசரஸ்ய” என்றும் கூறினார்.

இவ்விருவரையும் சேரப்பிடித்து நம்மாழ்வாரும் “மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே” என்றார். இதையே பல ஆழ்வார்களும் கூறியுள்ளனர்.

இந்த நிருபாதிகமான உறவு இருக்க, குற்றங்கள் கழிந்தால் தான் அங்கீகரிப்போம் என்று அவர்கள் இருந்தார்கள் என்றால், அது அந்த ஒழிக்க ஒழியாததான சம்பந்தத்திற்குச் செய்த தோஷமாம்.

குணக்கேடு எப்படி என்றால்.

தம் குழந்தைகளின் குற்றங்களையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தையும் கண்டு இரக்கம் கொள்ளாதிருப்பது க்ருபை என்னும் குணத்துக்குச் செய்யும் கேடாம்.

அது மட்டுமின்றி “எற்றே தன் கன்றின் வழுவன்றோ காதலிப்பது” என்றும் “குணம் கொள்ளும்” என்றும் சொன்னபடி, அவர்கள் குற்றங்களை போக்யமாகக் கொள்ளும் வாத்ஸல்யம் என்னும் குணத்துக்கு வரும் கேடுமாகும்.

இதற்கு மேலும் ஒன்று காட்டுகிறார் விஶதவாக் ஶிகாமணிகள்.

தோஷம் என்பது செய்யக் கூடாததைச் செய்யும் என்றவிடத்து, குற்றங்களைக் கண்டு எம்பெருமானும் சீறாதபடிக்கு அவனைப் பொறுப்பிக்கும் தாயான இவள், அந்தக் குற்றங்களைத் தானே கணிசித்து அவ்வாறிருக்கை.

தன் மக்களுடைய கீழ்மையைப் பார்த்து அவர்களை அடையத் தானே அவர்கள் முந்நின்று பத்தி உழவனாய்ப் பல கார்யம் செய்து அவர்கள் நன்மையையே நினைத்துத் திரிந்த இவன், அவர்கள் குற்றங்களைப் பார்த்து அங்கீகரிக்க மாட்டேன் என்றிருக்கை.

குணக்கேடு என்பது செய்ய வேண்டியவற்றைச் செய்யாதிருத்தல் என்றவிடத்து, அவர்கள் குற்றங்களைப் பாராமல் பிராட்டி புருஷகாரம் செய்யாதிருக்கை.

எம்பெருமான் விஷயத்தில், அவர்களுக்கு விருப்பமில்லாததை நீக்கியும், விரும்பியவற்றைக் கொடுத்தும் செய்யும் காத்தலைச் செய்யாதிருக்கை.

ஆக இரண்டு கழிந்தால் (கழிய வேண்டும் என்று இவர்கள் இருந்தால்), இவ்விருவருக்கும் இரண்டு உண்டாகும் என்பதே புதிய கணக்கு.

அப்படி உண்மையிலோ ஆகுமோ என்னில், ஆகாது. தம்மை வெறுப்பவர்களையே மேல் விழுந்து அங்கீகரிக்குமவர்கள், தம்மை அடைய வரும் இவர்களை அவ்வாறு நடத்துவதற்குப் ப்ரஸக்தியே இல்லை. இது அறியாதவர்களுக்காக அறிவித்த விஷயம் என்கிறார் மாமுநிகள்.

நிற்க.

இங்கு மற்றொரு புதிய கணக்கும் இருக்கிறது – அது என்ன?

2. இரண்டு குறைந்தால் ஒன்றுக்கு இரண்டு கூடியதாம்.

-2 = 1 x 2

அது எப்படி என்னில்.

சேதனானவன் தான் அங்கீகரிக்கப்பட்டவுடன், தன்னுடைய தோஷமும் குணக்கேடும் அழிந்ததாலேயே அது நடந்தது என்று நினைக்கக் கூடும்.

அப்படி அவன் நினைக்க, அந்த ஒருவனுக்கு தோஷமும் குணக்கேடும் கூடிற்றாம் என்கிறார் பிள்ளை உலகாரியன்.

தோஷம் எதுவென்றால், இந்த நினைவே அவன் செய்யக் கூடாத கார்யம் என்கிறார் மாமுநிகள்.

செய்வது என்பது உடலால் மட்டுமன்று, முக்கரணங்களாலும் என்கின்றனர் நம் பூர்வர்கள். மனதில் உண்டாகும் நினைவும் ஒரு கார்யமே. “மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்” என்றார் சொட்டைநம்பிகள். “சொல்லால் மனத்தால் கருமத்தினால்” செய்வன் என்றே கூறினார் திருவரங்கத்தமுதனார்.

ஆக, இந்நினைவே செய்யக் கூடாததை செய்த தோஷமாயிற்று.

குணக்கேடு எதுவென்றால், தன்னுடைய தாழ்ச்சியையும், தனக்குத் தோஷம் குணஹாநி இரண்டும் இருக்கச் செய்தே அவன் தன்னை அங்கீகரித்தான் என்றும், இவன் நினைக்க வேண்டியிருக்க, அதைச் செய்யாமல் இருப்பதாம்.

தம்மை அங்கீகரித்த பிறகும் இந்த நைச்யபாவத்தையே கொண்டிருந்தனர் ஆழ்வார்களும் ஆசார்யர்களும். மயர்வற மதிநலம் அருளப் பெற்ற பின்னும் “நீசனேன் நிறை ஒன்றுமிலேன்” என்றார் நம்மாழ்வார் திருவாய்மொழியில்; “அடிநாயேன்” என்றார் திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில்.

ஆசார்யன் அநுக்ரஹம் பூர்ணமாகப் பெற்ற பின்னும் “அமர்யாத: க்ஷூத்ர: சலமதி” என்றார் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நத்தில்; “த்வதபசார ஶதை: அஸஹ்யை:” என்றார் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவத்தில்; “அதிக்ராமந்நாஜ்ஞாம்” என்றார் பராசர பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்.

இது போல் பல இருக்கின்றன.

முன்பிருந்ததற்கும் அங்கீகரித்த பிறகும் வாசியற அதே தோஷ குணஹாநிகள் செல்கின்றதென்பதை நம்மாழ்வாரும் தம்முடைய திருவாய்மொழியில் “இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்?” என்றார்.

இதற்கு எம்பெருமான் என்ன பதில் சொன்னான் என்று பட்டரை நஞ்சீயர் கேட்க “லஜ்ஜாவிஷ்டனாய்க் காலாலே தறையைக் கீறி நிற்குமித்தனை போக்கி வேறு உத்தரமுண்டோ? என்றருளிச் செய்தார்” என்கிறார் ஈட்டிலே நம்பிள்ளை.

ஆசார்ய ஹ்ருதயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் “இன்று அஹேதுகமாக ஆதரித்த நீ அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க … நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க” என்கிறார்.

ஆக, செய்ய வேண்டிய அந்த நினைவைச் செய்யாமல் இருத்தல் குணக்கேடாயிற்று.

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கென்று அவனை நித்யர்களும் முக்தர்களும் நாடுவது போல, சேதனனும் மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனாலேயே முதல் நினைவைத் தொலைத்தும் இரண்டாம் நினைவைத் தவிராமலும் இருக்க வேண்டும்.

ஆக, இரண்டு கழிந்தால் (கழிந்து விட்டது என்று சேதனன் நினைத்தால்) இவன் ஒருவனுக்கு இரண்டு உண்டாகும் என்பதே புதிய கணக்கு.

ஸ்ரீவசநபூஷண திவ்யஶாஸ்த்ரத்தில் பிள்ளை லோகாசார்யரின் சூர்ணைகள் காண்மின்:

1. இரண்டும், இரண்டும் குலைய வேணுமென்றிருக்கில், இரண்டற்கும் இரண்டும் உண்டாயிற்றதாம்.

2. இரண்டும் குலைந்தது என்றிருக்கில், இத்தலைக்கு இரண்டும் உன்டாயிற்றதாம்.

புதிய கணக்கின் மூலமாக நம் பழவடியேன் தன்மையைக் காட்டி அருளினர் நம் ஆசார்யர்கள்.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் மதுரகவி தாசன்

TCA Venkatesan

http://acharya.org

Mar 16, 2021

புதுக் கணக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *