என்ன? இந்த தலைப்பு சரி தானா? இப்படிச் சொல்வது தகுமா?
கருணையே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியார் ஹிம்ஸை செய்வாளா?
கருணா க்ஷமாதீந் குணாந் த்வயி க்ருத்வா என்றார் பராசர பட்டர். அவரே கருணை விழி விழிக்க ஒண்ணாது என்று நம்பெருமாளிடத்திலும் விண்ணப்பித்தாரிறே.
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா என்றார் வேதாந்த தேசிகன்.
அகில ஜகந் மாதரம், அஸ்மந் மாதரம் எனப்பட்டவளான தாயாருக்கும் , ஹிம்ஸை என்ற வார்த்தைக்கும் என்ன பொருத்தம் என்ற சங்கை எழக் கூடும்.
கேண்மின்.
நாம் அறிந்த சாமாந்ய அர்த்தமாவது ஹிம்ஸை என்றால் துன்புறுத்தல் என்பது. ஆனால், வடமொழியில் ஹிம்ஸை என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
துன்புறுத்தல், கொல்லுதல், தீங்கிழைத்தல், போர் செய்தல், எதிரியாய் இருத்தல், நோவுபடுத்துதல், அழித்தல் போல்வன.
அப்பொழுது தாயார் ஹிம்ஸை செய்கிறாள் என்றால் அது எவ்வர்த்தத்தில் வருகிறது என்று நோக்க வேண்டும்.
முதற்கண், இது எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.
ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வ்யாக்யானத்தில் மணவாள மாமுநிகள் “ஶ்ரு-ஹிம்ஸாயாம் என்கிற தாதுவிலும்” என்கிறார். அடுத்து “ஶ்ரூ-விஸ்தாரே என்கிற தாதுவிலும் நிஷ்பந்நமான ஸ்ரீசப்தத்தில்” என்கிறார்.
இவை பிராட்டியின் ஸ்ரீ என்னும் திருநாமத்திற்கான அடிப்படைகளுள் இரண்டாகும்.
1. ஹிம்ஸை
இதில் முதற்கூற்று ஶ்ரு-ஹிம்ஸாயாம் என்கிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
அதாவது பிராட்டி செய்யும் ஹிம்ஸை என்பது துன்புறுத்துதலைக் காட்டவில்லை. போக்குவதைக் காட்டுகிறது. அதுவும் குற்றங்களை மட்டுமே போக்குபவள் என்கிறது.
2. விஸ்தரணம்
இரண்டாவது கூற்றான ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.
யார் பக்கல்
இப்படி பிராட்டி செய்யும் ஹிம்ஸையும் விஸ்தாரமும் யார் பக்கலிலே என்பது அடுத்த கேள்வி.
இவை இரண்டும் சேதனரான ஜீவாத்மாக்களிடத்தில் என்பது தெளிவு.
எம்பெருமானை அவர்கள் பற்றுவதற்குத் தடையான தீய குணங்களையும், குற்றங்களையும், தீமனத்தையும் கெடுத்து அவற்றை அழிக்கிறாள், ஹிம்ஸிக்கிறாள் தாயாரானவள்.
தடைகளைப் போக்குவது மட்டுமன்றி இஷ்டப் ப்ராப்திக்கு தேவையானவற்றை வளர்ப்பதும் அவசியம். அதனால் அவனை அவர்கள் பற்றுவதற்குறிய நல்ல குணங்களையும் அவள் வளர்க்கிறாள்.
எம்பெருமான் பக்கலிலும்
ஆனல் அவள் செய்யும் ஹிம்ஸையும் விஸ்தாரமும் ஈச்வரனிடத்திலும் ஏற்படும் என்று காட்டுகிறார் மணவாள மாமுநிகள்.
அது எப்படி?
ஜீவன்களிடத்தில் தீய குண்ங்கள் உண்டு என்பது கண்கூடு. அகில ஹேய ப்ரத்யநீகனான எம்பெருமானிடத்தில் என்ன குற்றம் உள்ளது என்றால்.
தன்னை நாடி வரும் சேதனனை அங்கீகரிப்பதற்குத் தடையாய் இருக்கும் அவனுடைய ஸ்வாதந்த்ர்யமே அது என்கிறார் மாமுநிகள்.
அப்படிப்பட்ட ஸ்வாதந்த்ர்யத்தை ஹிம்ஸிப்பது – அதாவது அழிப்பது அவளுடைய திருநாமத்தால் தேறுகிறது.
“புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால்” என்கிறார் பிள்ளை உலகாரியன்.
தடையைப் போக்குவது மட்டுமல்லாமல் அவனுடைய க்ருபை முதலிய குணங்களை நிறம் பெறவும், அதாவது விஸ்தீரிக்கவும் செய்கிறாள் பிராட்டி.
“ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம்” என்பது பிள்ளை லோகாசாரியரின் ஸ்ரீ ஸூக்தி.
ஆக, பிராட்டி செய்யும் ஹிம்ஸையாவது, சேதனர்களுடைய எல்லா குற்றங்களையும், ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் போக்கடிக்கையாகும் என்று இத்தால் தேறுகிறது.
குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணும்.
அடியேன் மதுரகவி தாசன்
TCA Venkatesan