இதென்ன? சேற்றில் குளியல் என்று நாம் ஒன்று செய்வதா? சுத்தமான ஜலத்திலோ நீர் நிலைகளிலோ நீராடுவதன்றோ நமக்குக் குளியல் என விதிக்கப்பட்டுள்ளது. ஶாஸ்த்ரங்கள் சொல்லும் ஆசாரமும் இதைத் தானே வலியுறுத்துகிறது.

ஸ்நாநங்கள் நித்ய ஸ்நாநம், நைமித்திக ஸ்நாநம், ப்ராயஶ்சித்த ஸ்நாநம் என்று பல வகைப்படும். பல கார்யங்களைச் செய்வதற்கு குளித்தல் அவஸ்யமாகிறது. “குளித்து மூன்றனலை ஓம்பும்” என்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். “ஸ்நாத்வா புஞ்சீத” என்றது ஶாஸ்த்ரமும்.

ஸ்நாநம் செய்வதற்கு பல விதிகள் ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் எவற்றிலும் சேற்றில் குளிக்க வேண்டும் என்றில்லையே. மாறாக சேற்றை, அதாவது உடம்பில் ஏற்பட்ட அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று தானே உள்ளது.

நாம் அறிந்தவற்றில் ம்ருகங்கள் தான் சேற்றில் புரளுகின்றன. இதில் தலையாயதாக நாம் பார்ப்பவை எருமை மாடுகளையும், வராகங்களையும்.

“மாசுடம்பில் நீர் வாரா மானமில்லா பன்றி” என்றாள் ஆண்டாளும்.

அளவு படாத வராகம் என்றும், உவமானம் சொல்ல இயலாத வராகம் என்றும் கொள்ளத் தக்கதாயினும், அபிமாநமில்லா பன்றி என்றே திருவுள்ளம் பற்றினார் பெரியவாச்சான் பிள்ளை. “ஈஶ்வராபிமாநம் வாஸனையோடே போனபடி” என்பது அவர் வ்யாக்யானம்.

இப்படி வராஹ நாயனார் இருக்கலாம். அது நமக்கு அமையுமோ என்னில்.

உண்டு என்கிறார் குலசேகர ஆழ்வார்.

“அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழுஞ்சேறு என் செண்ணிக்கணிவனே” – அதாவது, அடியார் திருவடி பட்ட சேற்றை அணிவதே உசிதம், என்பது அவர் திருவாக்கு.

அது நிற்க.

திருவரங்கன் திருக்கோயில் திருமுற்றம் எவ்வாறு சேறு படிந்ததாயிற்று?

கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாகும் என்றிருக்கும் தொண்டர் நிரம்பியிருக்க, அவன் திருமுற்றம் சுத்தமாகவன்றோ இருக்க வேணும்.

கேண்மின்.

இவ்வாழ்வாரே இதை முன்னர் விளக்குகிறார்.

“வண்பொன்னிப் பேராறு போல் வரும் கண்ணநீர் கொண்டு என்பது” பாசுரம். திருமுற்றத்தைத் சீய்த்து வைக்கக் குழுமியிருக்கும் தொண்டர் கண்களிலிருந்து பெருகி வரும் கண்ணீரானது அவ்விடத்தைச் சேறு செய்ததாகிறது. அந்த சேறே தம் தலைக்கு அலங்காரம் என்கிறார் ஆழ்வார்.

அப்படிச் சேறாகும் அளவுக்கும் கண்ணநீர் பெருகுமோ என்னில்.

நம்மாழ்வார் கூறும் வார்த்தை காண்மின். திருவரங்கம் விஷயமான பாசுரத்தில், பராங்குச நாயகியின் தாய் தன் மகளின் நிலை கூறுமிடத்தில், “கங்குலும் பகலும் கண்துயில் அறியாள், கண்ண நீர் கைகளால் இறைக்கும்” என்கிறாள். கைகளால் எடுத்து இறைக்கும் அளவிற்குக் கண்ணீர் பெருக்கி நின்றாள் நாயகி என்கிறாள் திருத்தாயார்.

தானான தன்மையிலும் எம்பெருமான் செய்கைகளைக்  கேட்குந்தோறும், கண்களில் இருந்து அருவி போல் நீர் பெருகும் என்று சொன்னார் இவ்வாழ்வாரே: “கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர்”. இதனாலிறே இவர் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தது.

குலசேகர ஆழ்வாரும் “ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர” என்று கண்ணீர் மழையெனப் பெருகும் என்றார்.

இப்படியே “கண்பனி சோர” என்றும், “கண்ணநீர் சோர” என்றும், “கண்ணிணை முத்தம் சோர” என்றும் பலவுள.

இது அடியார் அளவு மட்டுமன்று, அடியார்களைக் கண்ட அரங்கன் கண்களிலிருந்தும் கருணை நீரானது அந்தத் திருமுற்றத்தில் பெருகும் என்கிறார் பராசர பட்டர் – “ஶேஷசய லோசநாம்ருத நதீ” என்பது ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் அவர் கூறும் வார்த்தை. அந்தப் ப்ரவாஹத்திலிருந்து தப்பவே திருமணத் தூண்கள் உள்ளன என்று சமத்காரமாகப் பேசுகிறார் பட்டர். குலசேகர ஆழ்வார் “மணத்தூணே பற்றி நின்று” என்பதற்கு பட்டர் காட்டும் கருத்திது.

திருப்பாவையில் ஆண்டாளும் “நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும்” என்றாள். அங்கு எருமையின் நினைவினாலேயே பால் சுரந்து சேறானது. அது போலேயே, இங்கு எம்பெருமான் நினைவினாலேயே அடியாருக்கும், அடியார் நினைவினாலேயே எம்பெருமானுக்கும் கண்ணநீர் சுரந்து சேறாயிற்றென்பதாம்.

இப்படி அடியார் கண்களிலிருந்து கண்ண நீர் ப்ரவஹித்து சேறு செய்ய நாம் கண்டதுண்டோ என்னில், உண்டு என்று நாம் இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தில் காண்கிறோம்.

யுத்தம் முடிந்து அயோத்யை திரும்பும் வழியில் ஸ்ரீ ராம பிரான் பரத்வாஜ முனிவர் ஆஶ்ரமத்தில் தங்கினான். அப்போது முனிவரிடத்தில் அயோத்யையைப் பற்றியும், தாய்மார்களைப் பற்றியும், பரதாழ்வானைப் பற்றியும் எம்பெருமான் வினவ, அனைவரும் நலமாக உள்ளனர் என்று கூறும் முனிவர் பரதனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

பங்கதிக்தஸ்து பரதோ ஜடிலஸ்த்வாம் ப்ரதீக்ஷதே ||

பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வம் ச குஶலம் க்ருஹே |

அதாவது உம்முடைய பாதுகைகளை முன்னே வைத்துக் கொண்டு, நீர் வருவதை எதிர் நோக்கி இருக்கும் பரதனானவன் ஜடைமுடி தரித்தும், தன் உடம்பு முழுவதும் சேற்றை அணிந்தும் (பங்க திக்த:) இருக்கிறான் என்றார்.

இப்படி முனிவர் சொன்னது சரியா? பரதன் திருமேனியில் இப்படி புழுதி எவ்வாறு படிந்திருந்தது? என்று நாம் ஆலோசிக்க வேண்டும்.

பரதன் ஜடா முடி தரித்திருந்ததனால் அவன் குளியாதிருந்தான், எனவே தான் அவன் திருமேனி புழுதி படிந்திருந்தது என்பாருண்டு. ஆனால் இது ரசமன்று.

யுத்தம் முடிந்த பின் பரதனை விரைவில் சென்று அடைய இச்சித்த எம்பெருமான் குளியலை வெறுத்தான் என்று அவனே சொன்னதாகக் காண்கிறோம்.

தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்மசாரிணம் |

ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராண்யாநி ச ||

என்பது ராகவன் வார்த்தை. அதாவது தர்மத்தின் வழி நடப்பவனான பரதனைப் பிரிந்திருப்பதால் ஸ்நானத்தையும் , உடைகளையும் ஆபரணங்களையும் விரும்பவில்லை, அயோத்தியை நோக்கி விரைகிறேன் என்றான் சக்ரவர்த்தித் திருமகன்.

ஒரு வேளை இது போலவே பரதனும் இருந்திருப்பானோ என்னில். ஆடை ஆபரணங்களை அவன் வெறுத்திருந்தான் என்பது அவன் கொண்ட திருக்கோலம் மூலம் நமக்குத் தெரிகிறது. ஆனால் அவன் ஸ்நானம் செய்வதைத் தவிர்க்கவில்லை என்பதை நாம் லக்ஷ்மணன் வாயிலாக அறிகிறோம். பரதன் நித்யமும் ஸரயு நதியில் இறங்கிக் குளித்து வந்தான் என்கிறார் இளைய பெருமாள் – “கதம் நு அபரராத்ரேஷூ ஸரயூமவகாஹதே”.

எனவே அவன் திருமேனியில் புழுதி படிந்ததற்கு வேறொரு காரணம் இருக்க வேண்டும்.

அதை ஆசார்ய ஹ்ருத்யம் 127வது சூர்ணையில் அழகாகக் காட்டுகிறார் அழகிய மணவாள நாயனார் – “அன்னை என் செய்யில் என் ராஜ்யமும் யானே என்று பெருஞ்செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவிக் குடிக்கிடந்த கையறவும்” என்று.

இதில் காட்டுக்குச் சென்று இராம பிரானுடைய திருவடி நிலைகளைச் சுமந்து மீண்டு வந்த பரதன் தன்னுடைய பெருக்காறு போன்ற கண்ணநீரால் ஏற்பட்ட சேற்றிலே மூழ்கிக் கிடந்து தன் சரீரம் முழுதிலும் அழுக்குப் படிந்து கிடக்க இருந்தான் என்று ஸுஸ்பஷ்டமாகக் காட்டுகிறார் ஸூத்ரகாரர்.

இப்படியாக, எம்பெருமான் அடியார்கள் திருவடி ஸம்பந்தம் பெற்ற துகளானது அவ்வடியார்களின் திருக்கண்களிலிருந்து பெருகும் நீரினாலே சேறாக்கப்பெற்று, அச்சேற்றே நமக்கு தூய்மை தரும் வஸ்துவாகிறது என்றும், அதில் குடைந்தாடும் ஆட்டமே நமக்கு உன்னதமான நீராட்டம் ஆகிறது என்றும் காண்கிறோம்.

அந்தச் சேற்றில் ஆட, நமக்கு கங்கை நீரில் ஆடும் ஆசையும் வ்யர்த்தமாகி விடும் என்று “தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே?” என்கிறார் குலசேகர ஆழ்வார்.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணுமாய்ப் ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் மதுரகவி தாசன்

TCA Venkatesan

http://acharya.org

Mar 11, 2021

சேற்றில் ஒரு குளியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *