இராமாயணத்தை ஸ்ரீ ராமாயணம் என்றும் ஸ்ரீமத் ராமாயணம் என்றும் அழைப்பாருளர்.

இவ்விரண்டுக்கும் என்ன வித்யாசம்? இவற்றில் எதை ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் ஆதரித்தார்கள் என்று ஒரு சிறு ஆராய்ச்சி.

ஸ்ரீ என்பது ஸ்ரீதேவியின் திருநாமம்.

முமூக்ஷுப்படியில் பிள்ளை உலகாரியன் “ஸ்ரீ என்று பெரிய பிராட்டியார்க்குத் திருநாமம்” என்கிறார்.

தம்முடைய சதுஶ்லோகியில் ஆளவந்தாரும் “ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதீ” என்கிறார்.

ஸ்ரீ என்ற வடமொழி சொல்லுக்கு மூலம் “ஸ்ரீந் சேவயாம்” என்ற சொற்றொடர். இதற்கு ஆறு பொருள்களை நம்முடைய பூர்வர்கள் விவரிக்கின்றனர்.

1. ஸ்ரீயதே

2. ஶ்ரயதே

3. ஶ்ருணோதி

4. ஶ்ராவயதி

5. ஶ்ருணாதி

6. ஶ்ரீணாதி

எல்லாராலும் அடையப்படுபவள் என்பதால் ஸ்ரீயதே.

எம்பெருமானை தான் அடைவதால் ஶ்ரயதே.

தன்னை அடைந்தவர்களின் குறைகளை அன்புடன் கேட்பதால் ஶ்ருணோதி.

அவைகளை எம்பெருமானை கேட்பிக்கச் செய்வதால் ஶ்ராவயதி.

அடியவர்கள் குற்றங்களை மறப்பிக்கச் செய்வதால் ஶ்ருணாதி.

தன் கல்யாண குணங்களால் அனைவரையும் மகிழ்விக்கச் செய்வதால் ஶ்ரீணாதி.

“மத்” என்ற சப்தம் அவளும் அவனும் என்றும் உடன் இருப்பதைக் காட்டுகிறது.

பிள்ளை லோகாசார்யர் வார்த்தை: “மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது”.

அடியவர்கள் வரும் பொழுது அவர்களுக்காக பரிந்துரை செய்யும் கார்யமான புருஷகாரத்திற்காக அகலகில்லேன் இறையும் என்று அவள் அவனை விட்டுப் பிரியாத நிலயைக் காட்டுவது இச்சப்தம்.

இதைக் கொண்டு பார்க்கும் போது ஸ்ரீமத் ராமாயணம் என்பதை நாம் தாயார் விட்டுப் பிரியாத இராமனின் கதை என்று கொள்ளல் தகுதியே.

தொடக்கத்திலிருந்து இறுதி வரை தாயாரான சீதா பிராட்டியின் உளதாம் தன்மையை நாம் இராமாயணத்தில் காண்கிறோம்.

இருப்பினும் நம் பூர்வர்கள் ஸ்ரீ ராமாயாணம் என்றே கொண்டார்கள்.

ஏனெனில் – ராமாயணம் என்பது அவர்களுக்கு பிராட்டியின் கதையாகவே அமைந்திருந்தது.

ஸ்ரீவசனபூஷணத்திலே பிள்ளை உலகாரியன் “இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது” என்றாரிறே.

வால்மீகி மஹரிஷியும் ராமாயணத்தை சீதையின் மஹத்தான காவ்யம் என்றான்.

காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் சீதாயா: சரிதம் மஹத் |

என்பது கவியின் பால காண்ட வாக்யம்.

அப்படி என்றால் இதற்கு ராமாயணம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது, சீதாயணம் என்றில்லையே என்பர் ரசம் அறியாதோர்.

கேண்மின்.

ராமாயணம் என்பதில் ராமா என்ற சப்தம் எம்பெருமானையே காட்டுகிறது என்று நினைக்கலாகாது.

வடமொழியில் ரமா என்ற சொல் அழகிய பெண்ணைக் குறிக்கும். மங்கையர்கள் திலகமென வந்த செல்வியான பிராட்டிக்கே உரித்தான திருநாமம் ரமா என்பது.

மேலும் ராம என்கிற சொல் இனிமை என்ற அர்த்தத்தைத் தரும். அவ்வகையில் எம்பெருமானுக்குப் பத்னியாய் இனியளாயும் அடியவர்களுக்குத் தாயாய் இனியளாயும் இருக்கும் பிராட்டியைக் குறிக்கும் என்பது சாலப் பொருந்தும்.

அதைக் கொண்டு பார்க்கும் போது ராமாயணம் என்ற சொற்றொடர் இராமனின் கதை என்கிறது என்று நினைக்காமல் அது பிராட்டியின் கதை என்று நாம் தெளிவாகக் கொள்ளலாம்.

ஸ்ரீகுணரத்னகோஶத்தில் பட்டர் “ஸ்ரீமத்ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச்சரித்ரே” என்றவிடத்தில், ஸ்ரீ ராமனின் கதை என்று உலகில் பரவி இருக்கும் இவ்விதிஹாஸமானது தேவரீருடைய சரித்ரத்தைச் சொல்லுவதினாலேயே உயிர் தரித்திருக்கின்றது என்றார். இப்படி எம்பெருமான் விஶயமாம் நிலையைக் காட்டும் இடத்தில் ஸ்ரீமத் சப்தம் ப்ரயோகிக்கப்பட்டும், மற்றைய நிலைகளில் ஸ்ரீ ராமாயணம் என்றே வழங்கி வருவதையும் காண்கிறோம்.

ஆகையால் சீதா பிராட்டி விட்டுப் பிரியாமல் இருக்கும் இராமனின் கதை என்று கொள்ளாமல், ஸ்ரீ என்னும் தாயாரான அழகிய பிராட்டியின் கதை என்று சொல்லும் ஸ்ரீ ராமாயணம் என்பதையே கொண்டார்கள் நம்  பெரியோர்கள்.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணும்.

அடியேன் மதுரகவி தாசன்
TCA Venkatesan

ஸ்ரீயா ஸ்ரீமதா?
Tagged on:             

2 thoughts on “ஸ்ரீயா ஸ்ரீமதா?

  • January 9, 2021 at 10:13 am
    Permalink

    Excellent narration swamy. Arbhudam
    Adiyen

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *