செய்யுளிலோ க்ரந்தத்திலோ ஒரு சொல்லானது அதற்கு முன் வரும் பதத்தோடு சேர்ந்தும் பின் வரும் பதத்தோடு சேர்ந்தும் இருபொருள்களைத் தரக்கூடும். இவ்விரு முறைகளிலும் அர்த்தம் சித்தித்து வருவதற்கு வடமொழியில் காகாக்ஷி கோலக ந்யாயம் என்று பெயர். காக்கை ஒரு கண்ணைக் கொண்டே இரண்டு பக்கமும் பார்க்கும் என்று கூறுவதுண்டு. அது போலே, இந்த ஒரு சொல்லும் இரண்டு பக்கமும் பார்த்துப் பொருள் கொடுக்கும் என்றபடி.

இது எளிதாக விளங்கும் இடங்களும் உண்டு, பார்க்கும் போது உடனே புலப்படாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

இவற்றை நாம் திவ்ய ப்ரபந்தங்களிலும், க்ரந்தங்களிலும், ஸ்தோத்ரங்களிலும், எம்பெருமானுடைய வாக்கிலிருந்து வெளிப்பட்டுள்ள பகவத் கீதை போன்றவற்றிலும், அபௌருஷேய வேத ஶாஸ்த்ரங்களிலும் காண்கிறோம்.

வெளிப்படையாகத் தெரியும் அர்த்தத்தையே கொள்வர்கள் சாமாந்யர். ஆசார்யர்கள் அடி பணிந்தோர்கட்கு இரு அர்த்தங்களும் புலப்படும்.

சரி. அப்படி ஒரு சொல்லோ தொடரோ இரு பக்கமும் அந்வயித்து இரண்டு அர்த்தங்களைக் கொள்ளுமாகில், நாம் எந்த அர்த்தத்தை எடுத்துக் கொள்வது?

மேலையார்கள் செய்வதையே நமக்கு வழி என்று எப்போதும் கொள்வதால், அவர்கள் இவ்விடங்களில் எந்த கருத்தைக் கொள்கிறார்கள், அல்லது வலியுறுத்துகிறார்கள் என்று நாம் பார்த்து அதையே கொள்வது தகும்.

நம்முடைய ஸம்ப்ரதாயம் எம்பெருமானார் தரிசனம் என்றே சொல்லும்படியாய் விளங்கிய உடையவர், இது போன்ற இடங்களில் என்ன அர்த்தம் கொண்டார் என்பதும், ஏன் அந்த அர்த்தத்தைக் கொண்டார் என்பதும் இந்தக் கட்டுரையின் நோக்காகிறது.

இராமாநுஜரின் வடமொழிப் புலமை, தென்மொழிப் புலமை இரண்டுமே வீறுபெற்றது.

அவர் வடமொழித் திறமையை, இளம் வயதில், மாணாக்கனாய் இருந்த காலத்திலேயே தமக்கு உபதேசித்து வந்த யாதவப்ரகாசன் “கப்யாஸம் புண்டரீகம் ஏவமக்ஷிணீ” என்ற பதத்திற்குச் செய்த அர்த்தத்தைத் திருத்தியதைக் கொண்டு நாம் அறியலாம். மேலும் ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு எழுதிய ஸ்ரீபாஷ்யம் என்னும் வ்யாக்யாநம் தொடக்கமான அவருடைய நவரத்னங்கள் எனப்படும் ஒன்பது ஸமஸ்க்ருத க்ரந்தங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன.

ஸ்வாமியின் தமிழ்ப் புலமையையும் அளவிட்டுக் கூற இயலாது. அவரின் தமிழ் ஜ்ஞானத்தை இல்லை செய்யும் மூடர்கள் இக்காலத்திலும் உண்டு. அவர்கள் இருக்கட்டும். அவர் செய்த பல தமிழ்த் தனியன்களும், திவ்ய ப்ரபந்த வ்யாக்யாநங்களில் அவர் இட்ட நிர்வாஹங்களும் அவருடைய தமிழ்த் திறமைக்குச் சான்றாக இன்றளவும் விளங்குகின்றன.

“சொல்லார் தமிழ் ஒரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லை இல்லா அற நெறி யாவும், தெரிந்தவன்” என்றாரிறே அவர் காலத்திலேயே வாழ்ந்தவரான திருவரங்கத்தமுதனார்.

இப்படி இருக்கும் எம்பெருமானார் இது போன்ற இடங்களில் எவ்வாறு நிர்வாஹம் செய்தார் என்று பார்த்தால் நமக்கு எந்த அர்த்தத்தையும், எதற்காக அதைக் கொள்ள வேண்டும் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.

இதற்கு நாம் திவ்ய ப்ரபந்தத்தில் ஓரிடமும், எம்பெருமான் சோதி வாய் திறந்தருளிய கீதையில் ஓரிடமும் பார்ப்போம்.

1. திருவாய்மொழி

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!

திருவாய்மொழி தொடக்கமான உயர்வற என்னும் முதல் பாசுரத்திலேயே எம்பெருமானார் ஒரு நிர்வாஹம் காட்டுகிறார்.

இந்தப் பாசுரத்தில், நான்காம் அடியான “துயரறு சுடரடி தொழுதெழு” என்றவிடத்து, எம்பெருமானார்க்கு முற்பட்டோர், துயர் அறு என்ற பதத்தை பின்னர் வரும் சுடர் அடிக்கானதாகக் கொண்டு, நம்முடைய துயரை அறுக்கும் அவனுடைய தேஜோமயமான திருவடிகள், அல்லது அடியார்கள் துயரத்தை அறுத்து அதனால் ஒளி பெற்ற திருவடிகள் என்றும், அத்திருவடிகளைத் தொழும்படியாக ஆழ்வார் தம் மனத்தை நியமித்தருள்கிறார் என்றும் கொண்டிருந்தனர். ஈற்றுச்சொல்லான யவனவன் என்பதை ஒரு பதமாகக் கொண்டு அவ்வாறு அருளினர். அதாவது துயரறு சுடரடி என்பது துயர் அறுக்கும் சுடரடி ஆகிறது.

எம்பெருமானார், அவ்வாறு இல்லாமல், யவனவன் என்பதை யவன் என்றும் அவன் என்றும் பிரித்து, துயர் என்பதை முன்னடியில் இருக்கும் அவன் என்ற சப்தத்துடன் அந்வயித்தார். அதாவது, அவன் துயரை அறுக்கும்படியான அவனுடைய தேஜோமயமான திருவடிகள் என்றபடி. இங்கு துயரறு சுடரடி என்பது துயர் அறும் சுடரடி ஆயிற்று.

தாவி இவ்வையம் முற்றும் அளந்து அடியவர் துயர் தீர்த்ததினாலேயே அலர்ந்த “ஒண்சுடரடிப்போது ஒன்றுவிண்செலீஇ” என்றும் “பெருநிலம் கடந்த நல்லடிப் போது” என்றும் கூறுகிறார் நம்மாழ்வார். மேலும் அத்திருவடிகளின் சோதியானது இரண்டு இளஞ்சூரியன் போல் அவற்றைக் காட்டுகின்றன என்றும் “துளங்கு சோதித் திருப்பாதம் எல்லையில் சீர் இளஞாயிறு இரண்டு போல்” என்கிறார்.

அது நிற்க.

இப்படி உடையவர் சொல்வது சரியா? எம்பெருமானுக்குத் துயர் என்றும் ஒன்றுண்டோ? அகில ஹேய ப்ரத்யநீக கல்யணைக தாநன் என்றன்றோ உடையவரும் சரணாகதி கத்யத்தில் கூறுகிறார். அப்படி இருக்க ஹேய குணம் ஒன்றும் தட்டாதவனான அவனுக்குத் துயரம் என்பது சம்பவிக்கும் என்று சொல்லவும் கூடுமோ?

என்றால், துயரம் என்பது எப்போதும் ஹேய குணமன்று என்று பணிக்கின்றனர் நம் பூர்வர்கள்.

இப்பாசுரத்திற்கு வ்யாக்யாநம் காண்மின்.

நஞ்சீயர்: “திருவடிகளுக்குத் துயருண்டோ? என்னில் – ஆச்ரிதருடைய துயர் திருவடிகளுக்குத் துயர்.”

பெரியவாச்சான் பிள்ளை: “துயரற்ற என்றபடி, இவர் மயர்வற அவன் துயரற்றபடி.”

நம்பிள்ளையின் ஈடு: “’துயரறுக்கும்’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்யும்படி; ஸமஸ்த து:காபநோதந ஸ்வபாவமான திருவடிகள்: ஸகலாத்மாக்களுடையவும் து:க்கத்தைப் போக்குகையே ஸ்வபாவமான திருவடிகள். ’துயரறும் சுடரடி’ என்று எம்பெருமானார் அருளிச்செய்யும்படி: ’வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஶம்பவதி து:க்கித’ என்றால் து:க்கநிவ்ருத்தியும் அவனதாயிருக்கிமிறே : இவர் துயரறத் தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. இத்தால் இவர் மயர்வற அவன் துயரற்றபடி.”

இதை பராசர பட்டருடைய ஐதிஹ்யம் கொண்டு உணர்வோம்.

“அவாப்தஸமஸ்தகாமனாய், நிரதிஶயாநந்தயுக்தனாயிருக்கிற ஸர்வேஶ்வரனுக்கு ஓரிழவுண்டோ திருவுள்ளத்தில்?” என்ன ’வ்யஸநேஷு மநுஷ்யாணாம்’ என்கிறது குணப்ரகரணமோ தோஷப்ரகரணமோ? என்றருளிச் செய்தார் பட்டர்”, என்பது திருப்பாவை வ்யாக்யாநம்.

’வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஶம்பவதி து:க்கித’ என்றது ஸ்ரீராமாயண வாக்யம். அயோத்யா காண்டத்தில் தஶரத சக்ர்வர்த்தியானவன் ஸ்ரீ ராமனுக்குத் தான் முடி சூட நினைத்திருப்பதை சபையோர்க்குச் சொல்ல, அவர்கள் ’இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம்” என்றும், ’அநேகவர்ஷஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்த்வமஸி பார்த்திவ’ என்றும் கூறினர்.

“ஹே! கிழவனே, ஓடிப் போ” என்றார்கள் அவையோர்கள் என்கிறார் நம்பிள்ளை.

இதைக் கேட்டு உள்ளுக்குள் உவகை எய்தினாலும் வெளியில் வருத்தமுற்றவனாகக் காண்பித்துக் கொண்டு, ஏனென்று மன்னவன் கேட்க, ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களே தங்களை அவ்வாறு பேச வைத்தது என்று சபையினர் கூறினர். அவை என்னவென்று சொல்லிக் கொண்டு வருகையில், அவர்கள் கூறும் வார்த்தை:

வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருஶம் பவதி து:கித: |

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி ||

அதாவது, மற்றவர்கள் துன்புறும் போது அவர்களைக் காட்டிலும் துன்பம் அடைபவன் என்றும், அவர்கள் சந்தோஷம் கொண்டாலோ அவர்களைக் காட்டிலும் ஆநந்தம் கொள்பவன் என்றும் அர்த்தம்.

மற்றவர்கள் படும் துயரைக் கண்டு இராமன் சோகித்தான் என்னுமிடத்து, அந்தச் சோகம் குணமா, தோஷமா என்று வினவினார் பட்டர். அதாவது அது குணமே என்றபடி.

இத்தால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் தனக்காக வரும் துயரம் தான் தோஷமே ஒழிய பிறர்க்காக வருமது தோஷமன்று என்னுமது.

ஆக, திருவாய்மொழி முதல் பாசுரத்தில் எம்பெருமானாரின் திருவுள்ளம் என்னவென்றால், அடியார் படும் துயரைக் கண்டு அவன் திருவடிகள் துயருறுவது அவனுக்குண்டான கல்யாண குணமும், ஏற்றமுமே ஒழிய வேறில்லை என்பதாம்.

அப்படி அவர்கள் படும் துயரத்தைக் கண்டு தானும் துன்புற்றுத் தன் திருவடிகளைக் கொண்டே அதைத் துடைப்பதால், அத்திருவடிகள் சுடர் கொண்டு விளங்கிற்று என்பதே ஆழ்வார் திருவுள்ளம், என்பது உடையவர் காட்டும் நிர்வாஹம்.

இதையே தான் திருவரங்கத்தமுதனாரும் “அருமுனிவர் தொழும் தவத்தோன் எம்மிராமாநுசன் தொல்புகழ் சுடர் மிக்கெழுந்தது” என்று உணர்த்தினார்.

2. பகவத் கீதை

தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்

ததாமி புத்தியோகம் தம் யேந மாம் உபயாந்தி தே

பத்தாம் அத்யாயத்தில் பத்தாம் ஶ்லோகமான இதில், ’ப்ரீதி பூர்வகம்’ என்றொரு பதம் வந்துள்ளது. அதன் சாமாந்ய அந்வயமாவது பஜதாம் என்பதுடன் இருக்கும். அதாவது ப்ரேமத்தோடே என்னை பஜிக்கின்றவர்களுக்கு நான் புத்தி யோகத்தை அருளி அவர்கள் என்னை வந்து அடையும்படி செய்கிறேன் என்பதாம். இப்படித் தான் சங்கரரும் தம்முடைய பாஷ்யத்தில் காட்டியுள்ளார். எல்லோருமே ப்ரீதியோடு அவனை அணுகுவர்கள் என்பதில்லையாதலால் இப்படிச் சொல்வதில் எந்தக் குறையுமில்லை.

ஆனால், நம்மிராமாநுசனோ, ப்ரீதி பூர்வக பதத்தை இரண்டாம் வரியோடு அந்வயப்படுத்துகிறார், ’தமேவ புத்தியோகம் ப்ரீதி பூர்வகம் ததாமி’ என்று. அதாவது இந்த புத்தி யோகத்தை களிப்போடு அருளுகிறேன் என்றபடி. இதனால் ப்ரீதி பூர்வகமானது, துயரறும் என்றதைப் போல, அடியார்களுக்கு என்பதைக் காட்டிலும் அவனுக்கு என்றதாயிற்று.

இதனால் தேறியது என்னவென்றால், எம்பெருமானுடைய பரம உதார கல்யாண குணத்தை இது காட்டுகிறது என்பதாம். கொடுக்கும் இடத்தில் உவகையோடே கொடுப்பதென்பது எல்லோருக்கும் நிகழக் கூடியதன்று. சாதாரணமான கொடையிலேயே இப்படியென்றால், மிக உயர்ந்த விஷயத்தைக் கொடுக்கும் போது யோசித்தும், வருந்தியுமே கொடுப்பர் உலகத்தோர். அப்படி வருத்தமுறா விட்டாலும் பற்றில்லாமல் கொடுப்பர் உயர்ந்தோர். ஆனால் உத்தமோத்தமனான எம்பெருமான், தன்னை அடையும்படியான சீரிய ஜ்ஞானத்தையே கொடுக்குமளவிலும், மிகுந்த ஸந்துஷ்டியுடன் கொடுக்கிறான். அந்தக் கல்யாண குணத்தை முந்நிறுத்தியே இவ்விதம் அந்வயம் காட்டினார் உடையவர்.

இதை ஸ்வாமி எங்கிருந்தெடுத்தார் என்னும் கேள்விக்கு நாம் ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரகாரர் சொன்னதையே நினைவில் கொள்ள வேண்டியது: “இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர்”.

நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழியில் “வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்குகந்து” என்கிறார். நிர்ஹேதுகமாக அடியார்களுக்குத் தானே அருள் செய்யும் எம்பெருமான், அந்த க்ருபையை உள்ளம் குளிர்ந்தே செய்கிறான் என்கிறார் ஆழ்வார். இங்கு பெரியவாச்சான் பிள்ளை “தம்முடைய உகப்பே ஹேதுவாக” என்கிறார்.

வேறோரிடத்திலும் ஆழ்வார் “உகந்து வந்து அடியேன் உள் புகுந்தான்” என்கிறார். “உவந்து எம்மைக் காப்பாய் நீ” என்றார் திருமழிசையாழ்வாரும்.

இப்படி ஆழ்வார் சொன்னதை அடியொற்றியே எம்பெருமானார் பகவத் கீதை வாக்யார்த்தத்தை நிர்வஹித்தார் என்பது நம்முடைய பூர்வர்கள் திருவுள்ளம்.

தம்முடைய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸ்வாமி தேசிகன் இதைச் ஸுஸ்பஷ்டமாக “’ப்ரீதிபூர்வகம்’ இத்யஸ்ய பஜநாந்வயே ப்ரயோஜநம் மந்தம்” என்றும், “பரமோதாரத்வாதி பகவத் குணகண ப்ரகாஶநேந மஹத் ப்ரயோஜநம் இத்யபிப்ராயேண – ப்ரீதிபூர்வகம் ததமித்யந்வய உக்த:” என்றும் உரையிட்டருளினார்.

இவ்விரு உதாரணங்களினாலும் தேறியது என்னவென்றால், சாமாந்யமாகப் புலப்படும் அந்வயமும் அதனால் உண்டாகும் அர்த்தமும் இருந்தாலும், ஆராய்ந்து தேறின அந்வயத்தையும் அர்த்தத்தையுமே எம்பெருமானார் கொண்டிருந்தார் என்பதாம்.

இது போல் பலவுள்ளன.

ஆனால் இப்படி நிர்ணயங்கள் ஸ்வாமி செய்தார் என்பதற்கு என்ன காரணம் என்று நாம் ஆராய வேண்டும்.

அங்கும் பூர்வர்கள் காட்டுவதே நமக்கு வழி.

எவ்வந்வயத்திலும், எவ்வர்த்தத்திலும் எம்பெருமானுடைய கல்யாண குணங்கள் சிறப்பாகப் ப்ரகாசிக்கின்றனவோ, அது தான் சிறந்த அந்வயமும் அர்த்தமும் என்பதே அவர்கள் கொன்ட நிலை. அதனால் தான் இவ்விரண்டு இடங்களிலும் எம்பெருமான் கல்யாண குண விசிஷ்டன் என்று வருவதையே கொண்டார் நம் ஸ்வாமி.

இங்கு மட்டுமன்றி, எங்கும் எதிலும் எம்பெருமானுக்கு மேன்மை சேருவதையே நாம் கொள்ள வேண்டும் என்பதே பூர்வர்களின் சித்தமும் சித்தாந்தமுமாம்.

சரீராத்மபாவம் விசிஷ்டாத்வைதத்திற்கு திறவுகோல் என்றால், எல்லா விஷயங்களிலும், எல்லா விதத்திலும் எம்பெருமானுடைய பெருமையைச் சொல்வதே நம் ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல் என்பர் பெரியோர்.

இதனாலேயே இவ்விதமாகவே எம்பெருமானரும் நம் பூர்வர்களும் அந்வயம் காட்டி அருளினார்கள் என்பது கண்கூடு.

குற்றம் குறைகளைப் பொறுத்தருள வேணுமாய்ப் ப்ரார்த்திகிறேன்.

அடியேன் மதுரகவி தாசன்

TCA Venkatesan

http://acharya.org

Mar 20, 2021

ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல்

3 thoughts on “ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல்

 • March 28, 2021 at 9:32 am
  Permalink

  Brilliant explanation of Emberumanar’s interpretation of Ubhaya Vedhanthams!
  Your final note of ” This is the key to understand our Sampradhayam” is exceptional.

  ‘Valleergal neengale; naanethan aayiduga’
  Adiyen
  Ananthazhvan

  Reply
  • March 29, 2021 at 12:02 am
   Permalink

   adiyEn swamin.

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *