விபரீதமாய்த் தலைப்பு அமைப்பதே நமக்கு வழக்கமாகி விட்டது போலும். ஆகையால் இந்த தலைப்பு யாருக்கும் ஆச்சரியம் விளைவிக்காது எனத் தோன்றுகிறது. இருந்தாலும், ராக்ஷசர்கள் என்பவர்கள் ஸஹாயம் என்றொன்று செய்வார்களா, அப்படிச் செய்தார்கள் என்றால் அதை யாருக்குச் செய்தார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.
இதைச் சிறிது ஆராய்வோம்.
அரக்கர்கள் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டார்கள் என்று சொன்னால் அது ஒரு பொருட்டில்லை.
அரக்கர் அசுரர் என்போர் எம்பெருமானையும் அவன் அடியார்களையும் எதிர்த்தே நின்றார்கள் என்பதைப் பார்த்திருந்தாலும் அவர்களிலும் நல்லவர்கள் உண்டென்று நாம் காண்கிறோம். “பொல்லா அரக்கன்” என்று சொன்னதால் நல்ல அரக்கரும் உண்டென்று கூறுகின்றனர் நம் ஆசார்யர்கள்.
“’விபீஷணஸ்து தர்மாத்மா’ என்று நல்ல அரக்கனும் உண்டென்கை” என்பது பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்தி. “’விபீஷணஸ்து தர்மாத்மா’ என்று நல்ல அரக்கனும் ஒருத்தனுண்டிறே” என்றார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்.
அப்படிப்பட்டவர்கள் உதவி செய்தார்கள் என்றால் அதிலும் அதிசயம் ஒன்றில்லையே.
நாம் எதிர்பாராத இடங்களிலும் வகைகளிலும், தீயவசுரரும் அரக்கரும் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ உதவி செய்தார்கள் என்றால் அதில் தானே சுவை உள்ளது.
அப்படிச் செய்ததுண்டோ என்றால், உண்டென்றே நாம் கொள்ளும்படியாய் அமைந்திருக்கிறது. எப்படி என்று சில உதாரணங்கள் கொண்டு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கு.
— தொடரும்