2. பிராட்டிக்குச் செய்த உதவி
எவ்வுலகிற்கும் தாயிருக்கும் வண்ணமான அவனும் கருணையிலாதவனாம்படி “தேவ்யா காருண்யரூபயா” என்று கருணையே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியாரை ஹிம்சித்தார்கள் அரக்கர் என்றே நாம் கண்டிருக்க, அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள் எனில், எம்பெருமானைக் காட்டிலும் விஞ்சியிருக்கும் அவள் கருணையை அவள் திருவாக்காலேயே இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தியமையாம்.
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை அரக்கன் சீதா பிராட்டியை பெருமாளிடத்திலிருந்தும் பிரித்ததோடு மட்டுமில்லாமல் அவளை அரக்கியரைக் கொண்டு சித்ரவதையும் செய்தான்.
ஒற்றைக் காது, பெரிய காது, காதற்று, ஒற்றைக்கண், கண்ணற்று, ஒற்றைக்கால், பெரிய கால், காலற்று, தொங்குகின்ற அதரம் எனப் பல கோரமான உருவங்களையும், கோபம் கொண்டவர்களாயும் உள்ள ஏகஜடா, ஹரிஜடா, ப்ரகஸா, விகடா, விநதா பொன்ற அரக்கிகளின் உருவத்தாலும், சொல்லாலும், செயலாலும் பீடிக்கப்பட்டு, தன் இனத்தைப் பிரிந்து ஓநாய்களால் துன்புறுத்தப்பட்ட மானைப் போலே வாடினாள் பிராட்டி என்கிறார் மஹரிஷி.
வேபதே ஸ்மாதிகம் ஸீதா விஶந்தீ வாங்கமாத்மந: |
வநே யதா பரிப்ரஷ்டா ம்ருகீ கோகைரிவார்திதா ||
அவர்களும் தங்கள் தலைவனின் வார்த்தையைச் சிரமேற்கொண்டு அவளை இடைவிடாது துன்புறுத்தி வந்தனர். “ஏகாக்ஷீ ஏககர்ணீ முதலான எழுநூறு ராக்ஷஸிகள் ஏகதிவஸம் போலே பத்து மாஸம் தரிஜந பதஸநம் பண்ணவிருந்த பிராட்டி” என்கிறார் மணவாள மாமுநிகள்.
அச்சமயத்தில் விபீஷணன் மகளான த்ரிஜடை என்பாள் பிராட்டிக்கு ஆறுதல் சொன்னது மட்டுமன்றி, அவ்வரக்கியருக்கு நேரவிருக்கும் ஆபத்தை தான் கனவில் கண்டதை “ஸ்வப்நோ ஹ்யத்ய மயா த்ருஷ்டோ தாருணோ ரோமஹர்ஷண:” என்று சொன்னாள்.
அந்த நிமித்தங்களைக் கேட்டு அஞ்சின அவர்களுக்கு, அவர்கள் கேளாமல் இருக்கச் செய்தேயும் “தத்யம்யதி பவேயம் ஶரணம் ஹி வ:” என்று அபயம் அளித்து தன் காருண்யத்தின் மேன்மையைக் காட்டினாள் பிராட்டி.
“மித்ர பாவேந” என்று நட்பைப் பாராட்டாவிட்டாலும், தோஷம் கொண்டவனாய் இருந்தாலும், நட்பு உள்ளது போல காண்பித்தால் போதும் என்றான் எம்பெருமான். அப்படியன்றிக்கே, அவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் தன் கருணைக்கு பங்கம் எற்படாது என்று சொன்னது மட்டுமில்லாமல், செய்தும் காட்டினாள் பிராட்டி.
போர் முடிந்த பின்னர் பெருமாள் திருவடியை மீண்டும் சீதா பிராட்டியிடம் அனுப்பிய போது, அநுமன் அவளைச் சித்ரவதை செய்த அரக்கியரைக் கொல்ல அநுமதி கேட்டான்: “யதி த்வம் அநுமந்யஸே ஹந்தும் இச்சாமி” என்று.
அதற்குப் பிராட்டி, தங்கள் தலைவன் சொன்னதைக் கேட்ட தாசிகளை மன்னித்தேன் (“தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீ”) என்றது மட்டுமல்லாமல், “பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம்” என்று எவ்விஷயத்திலும் ரக்ஷிக்கும் தன்மையை திருவடி மூலமாகவேயே நடத்தியும் காட்டினாளன்றோ.
“திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன்சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே” என்றார் பிள்ளை லோகாசாரியர்.
அதற்கு வாய்ப்பளித்து உலகிற்கு அதைக் காட்டியமை, அரக்கியர் பிராட்டிக்குச் செய்த உதவியாம்.
— தொடரும்