1. பெருமாளுக்குச் செய்த உதவி

தாடகையின் புதல்வனான மாரீசன் என்பானொரு அரக்கன், சக்ரவர்த்தித் திருமகனை முன்னர் முன்னமே விஶ்வாமித்ர மஹரிஷியின் யாகத்தின் போது எதிர்த்து வந்து உயிர் பிழைத்து ஓடியவன்.

அப்படிப்பட்டவனை பின்னர் பொல்லா அரக்கனான ராவணன் ஸ்ரீ ராமனுக்கு எதிராகத் தனக்கு ஸஹாயம் செய்யும்படி கேட்கும் போது, அவன் கூறும் வார்த்தை காண்மின்.

ராமோ விக்ரஹவாந் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம: |
ராஜா ஸர்வஸ்ய லோகஸ்ய தேவாநாம் இவ வாஸவ: ||

பெருமாளை தர்மமே வடிவெடுத்து வந்தவன் என்று கொண்டாடுகிறான் அவன். பெரியோர்கள் இப்படிச் சொல்ல வேண்டியிருக்க, எதிரியும் புகழும்படியான தன்மை கொண்ட தனிப் பெருமை உடையோன் என்னும் கீர்த்தியை எம்பெருமானுக்கு நல்கினான் இவ்வரக்கன்.

தன் தாயைக் கொன்ற எம்பெருமானை அவன் இப்படிக் கொண்டாடியது அற்புதமன்றோ. அதுவே அவன் எம்பெருமானுக்குச் செய்த உதவியாம்.

இவனன்றி, அரக்கன் மனைவியான மண்டோதரி எம்பெருமானை நாரணன் என்றே காட்டினாள். இன்றளவும் ஸ்ரீரமனை ஒரு மானிடன் என்றே பார்ப்பதும், வழக்காடுவதும் நாம் காணும் விஷயமாய் இருக்கிறது. பெருமாளும் தன்னைச் சக்ரவர்த்தித் திருமகன் என்று கொள்வதையே சிறப்பாக நினைத்தான் என்றும் காண்கிறோம். “ஆத்மாநம் மாநுஷம் மந்யே தசராத்மஜம்” என்றானிறே.

தன் பரத்வத்தை அவன் அங்குமிங்கும் மறைத்துக் காட்டினான் என்று நிரூபிக்கின்றனர் நம் பூர்வர்கள். இதைக் காகாசுர பங்கம், ஜடாயு மோக்ஷம், குரங்குகளைக் கொண்டு கடலைக் கட்டியது போன்ற இடங்களில் காணலாம்.

கூரத்தாழ்வான் தம்முடைய அதிமாநுஷ ஸ்தவத்தில் இதை அவனிடமே விண்ணப்பிக்கிறார்:

ப்ருச்சாமி கிஞ்சந யதாகில ராகவத்வே
மாயாம்ருகஸ்ய வஶகோ மநுஜத்வமௌக்த்யாத் |
ஸீதாவியோகவிவஶோ ந ச தத்கதிஜ்ஞ:
ப்ராதாஸ்ததா பரகதிம் ஹி கதம் ககாய ||

மநுஷ்யகாசரிதமாசரிதும் ப்ரவ்ருத்தோ
தேவாதிகம் சரிதமங்க! கிமங்க்யகார்ஷீ: |
யத் ஸாகரே பத பபந்தித நாத! ஸேதும்
ஶைலை: ப்லவங்கமஸமிங்கிதஸம்பணுந்நை: ||

“குரக்கினத்தாலே குரைகடல் தன்னை நெருக்கி அணைகட்டி” என்றார் பெரியாழ்வாரும். “குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்” என்றார் தொண்டரடிப்பொடியாழ்வார். “சடாயுவை வைகுந்தத்தேற்றி” என்றார் குலசேகரப் பெருமாள்.

இப்படிப் பல செய்தாலும், க்ருஷ்ணாவத்திற்போலே ராமாவதாரத்தில் தன் பரத்வத்தை அவன் வெளிப்படையாகக் காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். அக்குறை தீர அவனை ஸ்ரீமந்நாராயணனாகப் போர்க்களத்தில் மண்டோதரி காட்டினாள். ராவணன் மடிந்த பின் அவன் மனைவியானவள் பெருமாளைக் கொண்டாடும் வார்த்தை காண்மின்:

தமஸ: பரமோ தாதா ஶங்கசக்ரகதாதர: |
ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீரஜய்ய: ஶாஶ்வதோ த்ருவ: ||

சங்கு சக்ரங்களைத் தரித்தவனாயும், ஸ்ரீவத்ஸ மறுவைத் தன் திருமார்பில் கொண்டவனாயும், நித்யஸ்ரீயாய் இருப்பவனாயும் கண்டே சொன்னாள் அரக்கன் மனைவி.

அவனடியார் இதைச் சொன்னால் பக்ஷபாதீ என்று உலகம் நிரசிக்கக் கூடும். அப்படி அல்லாமல் அவன் எதிரியின் மனைவியாய் இருந்தேயும், போர்க்களத்தில் தன் கணவன் ராகவன் கையால் மடிந்து கிடந்த சமயத்திலேயே இதைச் சொன்னது, அவனுக்கு மட்டுமன்றி இவ்வுலகிற்கே அவள் செய்த உதவியாகும்.

— தொடரும்

அரக்கர் செய்த உதவி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *